பழமை வாய்ந்த ஆலமரத்தை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு ரயில் நிலையம் அருகே சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறையினர் நேற்று வெட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த ஆலமரத்தை வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்தப்பணிக்காக சாலையின் இருபுறங்களிலும் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு ரயில் நிலையம் அருகே சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறையினர் நேற்று வெட்டினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த ஆலமரத்தை வெட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் நெடுஞ்சாலைத்துறையினர் அந்த மரத்தை தொடர்ந்து வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜு தலைமையில் அங்கு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலையில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்படுகின்றன. இதனால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சாலையில் செல்லும் பொதுமக்கள் நிழலுக்கு தவிக்கின்றனர், எனவே இதை தவிர்க்க ஜங்ஷன் சாலையில் உள்ள காங்கிரஸ் மைதானம், டேனிஷ் மிஷன் மருத்துவமனை, அரசு கிளை அச்சகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வெட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை விருத்தாசலம் போலீஸார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கை குறித்த மனுவை அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்துள்ளார்.