கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி தமிழில் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையில் சமூக விரோதிகள் சிலர் காவி நிற சாயம் ஊற்றியுள்ளனர். இதனை நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கண்டனர். பின்னர் இதுகுறித்து பெரியார் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பின் தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து வந்து பெரியார் சிலை மீது ஊற்றப்பட்ட காவி நிற சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். இந்நிலையில், பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி பெரியார் அமைப்பினரும், தி.மு.க.வினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டார். தற்போது இதுகுறித்து காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார். பெரியார் சிலை மீது காவி நிற சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.