ராகுல்காந்தி எப்போதும் பிரதமர் ஆகமாட்டார்; அகாலி தளம் தலைவர் அதிரடி

ராகுல் காந்தி பிரதமராக மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து அகாலி தளம் வெளியேறியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவையும் முறித்துக் கொண்டது.

பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான அகாலிதளமும் வேளாண் சட்டங்களை எதிர்த்து வருகின்றன. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அண்மையில் கூறும்போது, ராகுல் காந்தி பிரதமரான பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி பிரதமரான பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகிறார். அப்படியென்றால் நம்முடைய காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ராகுல் காந்தி பிரதமராக மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
விவசாயிகளை ஏமாற்றுவதற்காக முதல்வர் அமரிந்தர் சிங், ராகுல் காந்தியை முன்னிறுத்திப் பேசுகிறார். கடந்த 2017-ம் ஆண்டில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு ஏபிஎம்சி சட்டத்தில் திருத்தங்கள் செய்தது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை அகாலி தளம் தொடர்ந்து எதிர்க்கும். பஞ்சாபில் அகாலி தளம் அரசு பதவியேற்ற பிறகு விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.