ராஜஸ்தான் மாணவி முதலிடம்... நீட் தேர்வில் மாணவர்கள் அதிக தேர்ச்சி

ராஜஸ்தான்: நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடத்தை ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா பெற்றுள்ளார். மேலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகமாகி உள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளன, இதில் 56. 28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடத்தை ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 8,70,074 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஆஷிஷ் பத்ரா வத்ஷா என்ற மாணவர் இரண்டாம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் என்ற மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 99.9997733 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதே மதிப்பெண் எடுத்த கர்நாடகாவை சேர்ந்த ருச்சா பவாஷி என்ற மாணவிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்துள்ளது. ஓசி வகுப்பினரின் கட் ஆப் சென்ற ஆண்டு 138 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 117 ஆக குறைந்துள்ளது. எஸ்/எஸ்டி/ஓபிசி வகுப்பினருக்கு சென்ற ஆண்டு 108 கட் ஆப் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 93 ஆக குறைந்துள்ளது.

கடந்த 2020களில் ஓசி வகுப்பினரின் கட் ஆப் 147 ஆக இருந்தது. மேலும் மற்ற வகுப்பினரின் கட் ஆப் 113 ஆக இருந்தது குறிப்பிடதக்கது. 'டாப் 50' மாணவர்களில் 2 பேர் தமிழகத்திலிருந்து இடம் பிடித்துள்ளனர். டாப் 50 பட்டியலில் 16 பெண்கள் உள்ளனர். தனிஷ்காவின் மதிப்பெண் 715 ஆகும்.

டாப் 50 -ல் 9 பேர் கர்நாடகாவையும், குஜராத், டெல்லியிலிருந்து தலா 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து தலா 4 பேரும், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவிலிருந்து தலா 3 பேரும், தமிழகம், மத்திய பிரதேசம், ஹரியானாவிலிருந்து தலா 2 பேரும் டாப் 50-ல் இடம் பிடித்துள்ளனர்.