சச்சின் பைலட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் மாநில சபாநாயகர் மனுதாக்கல்

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் 18 எம்.எல்.ஏ.-க்களுக்கு கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கம் தர கெடு விதித்திருந்தார். இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார்.

இதுகுறித்து சபாநாயகர் சி.பி. ஜோஷி கூறுகையில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகருக்கு முழு அதிகாரம் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய என்னுடைய ஆலோசகரிடம் கேட்டுள்ளேன் என்று கூறினார்.