ஐதராபாத் மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி

ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி... நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு யோசனைகள் மற்றும் தடைகளுக்கு பிறகு ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, ஏற்கனவே, ஒப்பந்தம் செய்துள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு, அவர் ஐதராபாத் சென்றார். அங்கு படக்குழுவினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ரஜினிக்கு கடந்த 22ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நெகட்டிவ் என்ற முடிவு தெரிய வந்தது. இருப்பினும், ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், சென்னை திரும்புவதாக இருந்த அவருக்கு, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் காரணமாகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏதும் இல்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி விரைந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.