காலை உணவில் வாரத்திற்கு 2 நாட்களாவது சிறுதானியங்களைச் சேர்க்க .. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம் போல், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் காலை உணவு திட்டத்தையும் செயல்படுத்த உத்தரவிட்டு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சத்தான காலை உணவு வழங்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் கல்வி கற்கும் வகையில் முதல் கட்டமாக குறிப்பிட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து இக்காலை உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கியதினால் அரசு பள்ளிகள் அனைத்திலும் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாதாவது, “தமிழகத்தில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்; காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

பா.ம.க.வின் யோசனை வருகிற 25-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அரசுக்கு பாராட்டுகள். காலை உணவில் முதல்கட்டமாக வாரத்திற்கு இரு நாட்களாவது சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும்; அதன் பின்னர் படிப்படியாக எல்லா நாட்களுக்கும் நீட்டிக்க வேண்டும்” என அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.