இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல்

சென்னை: நாளை வெளியாகிறது... தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த, 1.69 லட்சம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. வரும் 20ம் தேதி சிறப்பு பிரிவுக்கும், 25ம் தேதியிலிருந்து பொதுப் பிரிவுக்கும் கவுன்சிலிங் துவங்க உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.இ., மற்றும் பி.டெக்., ஆகிய இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு தமிழக அரசின் சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு தரவரிசையை இறுதி செய்வதற்கான ரேண்டம் எண், கடந்த 2ம் தேதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.மதிப்பெண் அடிப்படையிலான பொது தரவரிசையும், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஜாதி வாரியான தரவரிசையும் பட்டியலில் இடம் பெறும். இந்த தரவரிசை அடிப்படையில்தான், ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இதன்படி முதற்கட்ட ஆன்லைன் கவுன்சிலிங் வரும், 20ம் தேதி துவங்க உள்ளது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு, இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிலும், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளின், 7.5 சதவீதத்துக்கு, 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

'சாய்ஸ் பில்லிங்' என்ற ஆன்லைன் விருப்பப்பதிவு முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். முதற்கட்ட கவுன்சிலிங் 23ம் தேதி முடிகிறது.இதையடுத்து தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ளிட்ட மற்ற அனைத்து வகை மாணவர்களுக்கும் வரும், 25ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது. மொத்தம் நான்கு சுற்றுகளாக, அக்., 21 வரை பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

பின், அக்.,22 மற்றும், 23ம் தேதிகளில் துணை கவுன்சிலிங் நடக்கும். அதற்கான விண்ணப்பங்கள் தனியே பெறப்படும். மேலும், பொது கவுன்சிலிங்கில் நிரம்பாமல் காலியாக இருக்கும், அருந்ததியர் பிரிவு இடங்களை, மற்ற பட்டியலினத்தவருக்கு மாற்றி ஒதுக்கும் கவுன்சிலிங், அக்.,24ம் தேதி நடக்கிறது. இதனுடன் இந்த ஆண்டுக்கான முதல் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நிறைவு பெற உள்ளது.