தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது தலைமைச் செயலகத்தில் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக ரெயில் போக்குவரத்து சிறப்பு சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் தொடக்கத்தில் பணியாளர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. பின்னர் தொற்று சற்று குறைந்தாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தலைமைச் செயலகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக தலைமைச் செயலக சங்கம் எச்சரித்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அந்த சங்கம் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து ஒரே துறையில் 36 பணியாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த 4 நாட்களை கணக்கிட்டால் 280 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தலைமைச் செயலக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மூலம் மற்ற ஊழியர்கள், உடன் பயணித்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என தொற்று எண்ணிக்கை உயரும் வாய்ப்பு, பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்துக்கு வரும் அனைத்து பணியாளர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது.