மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 6,063 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 8 ஆயிரத்து 341 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பாசனத்திற்காக தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் மழை தீவிரமடைந்ததால் நேற்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு இன்று 6 ஆயிரத்து 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து தற்போது குறைவான தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.64 அடியாக உள்ளது.