ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையும் 528 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 26,782 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது மற்ற மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதேபோன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடன் சில கோரிக்கைகளை வைத்துள்ளார்.

இதுகுறித்த விபரம் வருமாறு:- மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி உடனடியாக வழங்க வேண்டும். மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டம் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும். என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.