அரசு போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

சென்னை: அமைச்சர் அறிவுரை... மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எந்தவித இடரும் ஏற்படாத வகையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையினை மேம்படுத்துதல், அறிவிப்புகளின் செயல்படுத்தல் நிலை, விழாக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் நாளது வரையில் 173 கோடி மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை.

இந்தத் திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மகளிரை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை ஏற்படாத வகையில் பள்ளிக் கல்வித் துறையுடன் ஆலோசித்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.