ரூ. 1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரளா அரசு

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு... இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு அளித்தது கேரள அரசு.

இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நம்பி நாராயணன்(78), விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அப்போது இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாக 1994ல் குற்றம்சாட்டப்பட்டு நம்பி நாராயணனை கைது செய்து கேரள போலீசார் சிறையில் அடைத்தனர்.

இரண்டு மாதங்கள் நம்பி நாராயணன் சிறையில் இருந்தார். சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவந்தது.

தன்னை கைது செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய கேரள அரசு, இழப்பீடு தர வேண்டும்' என, கேரள நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சுமூகமாக முடிக்க கேரள அரசு சிறப்பு அதிகாரியை நியமித்தது. அந்த அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரளஅரசு முடிவு செய்தது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, நம்பி நாராயணனுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, கேரள அரசு, கடந்த ஆண்டு வழங்கியது.

இதை தவிர, தற்போது சிறப்பு அதிகாரி குழு சிபாரிசின் அளித்த அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ1. 30 கோடியை இழப்பீடாக கேரள அரசு வழங்கியது.