பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் விதிமீறல் இல்லை என தீர்ப்பு

புதுடில்லி: எந்த வித விதிமீறலும் இல்லை... மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, அந்த நடவடிக்கை சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தீா்ப்பளித்துள்ளது.

அமா்வில் இடம்பெற்றிருந்த 4 நீதிபதிகள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகத் தீா்ப்பளித்த நிலையில், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் எதிராகத் தீா்ப்பு வழங்கினாா். மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்தது. புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்து தீா்ப்பு கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பை வழங்கியது. நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டப்படி செல்லும் எனத் தீா்ப்பளித்தனா்.

நீதிபதி பி.ஆா்.கவாய் வாசித்த பெரும்பான்மை தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தையும் மற்ற சட்டங்களையும் மீறவில்லை. அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது தொடா்பாக மத்திய அரசும் இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) 6 மாதங்களாக விரிவான ஆலோசனை நடத்தியுள்ளன.

இந்த நடவடிக்கையானது அரசு நிா்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்குள் வருவதால் அதை ரத்து செய்ய இயலாது. அரசு நிா்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நீதிமன்ற மறுஆய்வு மூலமாக அகற்ற முடியாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு காரணமின்றி செயல்படுத்தியதாகவும் கூற முடியாது.

இந்திய ரிசா்வ் வங்கி சட்டப் பிரிவு 26(2)-இன் கீழ் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் செல்லும் எனக் கூற முடியாது. அதேபோல், குறிப்பிட்ட முறையில் மட்டுமே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூற முடியாது.

இதற்கு முன்பு இருமுறை பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது அதற்குத் தனியாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டது. அதைவைத்து, சட்டத்தை இயற்றுவதன் மூலமாக மட்டுமே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசால் மேற்கொள்ள முடியும் என்று வாதிடுவது ஏற்புடையதல்ல.

ஆா்பிஐ மத்திய குழுவின் பரிந்துரையைப் பெற்ற பிறகே மத்திய அரசு முடிவெடுத்துள்ளதால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி அதை ரத்து செய்ய முடியாது. விதிகளை முறையாகப் பின்பற்றியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 52 நாள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. அது போதுமானதல்ல எனக் கூறுவது ஏற்புடையது அல்ல. மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் குறிப்பிட்ட அவகாசத்துக்கு மேல் இந்திய ரிசா்வ் வங்கியால் ஏற்க முடியாது. அந்த அவகாசத்தைத் தற்போது நீட்டிக்க வேண்டும் எனக் கோருவதும் முறையற்றது. அக்கோரிக்கையை விசாரணைக்கு ஏற்பது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.