நன்னடத்தை நாட்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய முதல்வருக்கு சசிகலா கடிதம்?

கர்நாடக முதல்வருக்கு சசிகலா கடிதம்?... சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் தம்மை நன்னடத்தை நாட்களை கணக்கில் சேர்த்து முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சசிகலா உள்ளிட்டோரின் தண்டனை காலம் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலையாக உள்ளனர்.

இதனை பெங்களூரு சிறை நிர்வாகம் உறுதி செய்திருக்கிறது. ஆனால் நன்னடத்தை நாட்களை கணக்கில் கொண்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான முயற்சிகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினகரனின் டெல்லி பயணமும் கூட சசிகலாவின் விடுதலை தொடர்பானதாகத்தான் என கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலாவும் ஒரு கடிதம் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கடிதத்தில் தாம் சிறை தண்டனை காலத்தில் கன்னட மொழியை கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். பரோல் நாட்கள் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு நன்னடத்தை நாட்களை சலுகையாக தமக்கு வழங்க வேண்டும் எனவும் சசிகலா கேட்டிருக்கிறாராம்.

அதேநேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சிறையில் இருந்து விடுதலையாகிவிடக் கூடாது என்பதில் ஒருதரப்பு படுபிஸியாக இருக்கிறதாம். ஆகக் குறைந்தபட்சம் ஜனவரி வரையிலாவது சசிகலா சிறையில் இருந்தால் தங்களது அரசியல் பயணங்களுக்கு எந்த இடையூறும் இல்லை என கணக்குப் போட்டு செயல்படுகிறதாம் ஒரு குரூப். எது எப்படியோ இனி அரசியல் களம் சூடுபிடிக்கும் என்கிறார்கள்.