கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கடிதம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ், மனிதனின் சுவாச பாதையில் பாதிப்பை உண்டாக்கி அதன் மூலம் மரணத்தை விளைவிக்கும் உயிர்க்கொல்லி ஆகும்.

தும்மும்போதும், இருமும்போதும் தெறிக்கும் எச்சில் துளிகள் மூலம் இது அடுத்தவருக்கு பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர் பயன்படுத்திய பொருட்களை தொட்டு முகத்தில் தேய்ப்பதாலும் எளிதில் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். கொரோனா குறித்த சமீபத்திய ஆய்வுகளில், அது காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் மக்கள் மீண்டும் மதுபான விடுதிகள், உணவு விடுதிகள், அலுவலகங்கள், சந்தைகள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்லும்போது கொத்துக்கொத்தாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் சுகாதார பணியாளர்களுக்கு மிகச்சிறிய துகள்களையும் தடுக்கும் என்95 வகை முககவசம் தேவைப்படும். வீடுகளில் மிகச்சிறிய துகள்களில் மிதக்கும் நோய்க்கிருமிகளை கொல்வதற்கு புற ஊதா விளக்குகள் தேவைப்படலாம். மிகச்சிறிய துகள்கள் கூட மக்களை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.