பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர், ஐந்து வயது குழந்தை பலி

பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், ஐந்து வயது குழந்தையும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர். இன்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப்., வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், வியாழன் மாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.