கனடாவில் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு... நோயாளிகள் அவதி

கனடா: மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலை... கனடாவில் மருத்துவர்கள் மற்றும் தாதியருக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற மாகாண முதல்வர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் தாதியர் ஆகியோருக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகள் அண்மைக்காலமாக மூடப்பட்டு வரும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவத்துறை சார் ஆளணி வள பற்றாக்குறை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கனடாவின் பிரதான வைத்தியசாலைகளில் தாதியர்களுக்கான ஆளணி வற்றல் பற்றாக்குறை மிக அதிக அளவில் காணப்படுவதாகவும் இதன் தாக்கம் பாரதூரமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைகளின் போது அல்லது அவசர சிகிச்சைகளின் போது தாதியரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் ஆலணிவள பற்றாக்குறையானது நோயாளிகளுக்கு பெரும் அசௌகரியங்களை உருவாக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்க நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடிய சமஸ்டி அரசாங்கம் மாகாண அரசாங்கங்களுக்கு சுகாதாரத் துறைக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென மாகாண முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.