பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறி...கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டு, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்டத்துக்குள்ளாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு பஸ்களில் 60 சதவீதம் பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கவேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மாநகர எல்லைக்குள் ஓடும் பஸ்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்குள் வரும் பெரும்பாலான மாநகர பஸ்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிட்டுவிட்டன.

அந்த பஸ்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி 20 முதல் 25 பேர் வரை பயணிக்கும் அந்த பஸ்களில் கிட்டத்தட்ட 60 பயணிகளுக்கு மேல் பயணம் செய்வதை பார்க்க முடிந்தது.

குறிப்பாக கூடுவாஞ்சேரி-பிராட்வே (வழித்தடம் எண்.இ18), கூடுவாஞ்சேரி- தியாகராயநகர் (வழித்தடம் எண்.ஜி18), பட்டாபிராம்- பிராட்வே (வழித்தடம் எண்.71 இ) உள்பட சில வழித்தடங்களில் ஓடும் பஸ்களில் வழக்கமான நாட்களில் இருக்கும் கூட்டத்தை போலவே இருந்தது.

பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக சென்றால் கொரோனா நோய்த் தொற்றுக்கு வழிவகுத்துவிடும் என்று பயணிகள் அச்சம் கொள்கின்றனர். இதுபோல கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களில் கூடுதலாக பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.