தென் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் நிவர் புயலும், இம்மாத ஆரம்பத்தில் புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையில் காற்று வீசும் என்பதால் இன்று அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாலத்தீவு பகுதிகளில் நாளை மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், மீமிசல், ஆலங்குடி, ஈச்சன்விடுதி, மதுக்கூர், பாபநாசத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.