வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்தநாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.