தேசிய கல்விக் கொள்கை குறித்து குடியரசு தலைவர், பிரதமர் உரை

தேசிய கல்வி கொள்கை குறித்து உரை...நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமுல்படுத்த உள்ள நிலையில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைவேந்தர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகின்றனர்.

பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி, புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதை அமுல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உயர்கல்வி மேம்பாட்டில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு என்ற தலைப்பில், ஆளுநர்கள் மாநாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. காணொலி வழியில் இன்று நடைபெறும் மாநாட்டில் மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டைத் தொடங்கிவைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாக ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவை அறிவுசார்ந்த நாடாக்க இந்த ஆலோசனைகள் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.