தினமும் விலை உயரும் பொருட்களால் இலங்கை மக்கள் தவிப்பு

இலங்கை: அதிகரிக்கும் பொருட்களின் விலை... இலங்கையில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

ஆட்சி மாறினாலும் இலங்கையின் நிலவரத்தில் காட்சி மாறவில்லை. நிலைமை படுமோசமாகவே உள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் உரம் உள்ளிட்ட மருந்துகள் இல்லாமல் அல்லாடும் விவசாயிகளுக்கு அடுத்த அடியாக மண்ணெண்ணை விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மின்சார கட்டணம் அடுத்து தற்போது நீர் கட்டணம் என அனைத்தும் அதிகரிக்கின்றதே ஒழிய குறைந்தபாடாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே தற்போது கோதுமை மாவின் விலையும் முந்நூறு ரூபாவை தாண்டி விட்டது. இது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிடுகையில், சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை விநியோகிப்பதை நிறுத்தியுள்ளன. தினசரி தேவைப்படும் கோதுமை மாவில் 25% மட்டுமே சந்தையில் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரிப்பால் தமது வாழ்வாதாரம் எவ்வாறு அமையப்போகினறது என்பதே இன்று இலங்கை மக்களின் கேள்வியாக உள்ளது. குறிப்பாக வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்கும். தேநீர் கடைகளில் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும். இது தொடர்பில் யாரிடம் முறையிடுவது என மக்கள் விசனத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.