கறுப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் - கிறிஸ் கெயில் காட்டம்

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில் இனவெறி தாக்குதல் குறித்து என தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் காட்டமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற 46 வயதான கறுப்பினத்தர் போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் தேதி முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கிறிஸ் கெயில் உலகம் முழுவதும் இனவெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பல நேரங்களில் அத்தகைய வலியை நானும் உணர்ந்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், “மற்றவர்களின் வாழ்கையைப் போலவே கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையும் முக்கியமானது, கறுப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்”. இனவாதம் என்பது “கால்பந்தில் மட்டும் அல்ல, அது கிரிக்கெட்டிலும் இருக்கிறது. கறுப்பு சக்தி வாய்ந்தது. கறுப்பு எனது பெருமை” என பதிவிட்டு இருக்கிறார்.

அமெரிக்காவில் நடந்து வரும் இனவெறிக்கு எதிரான போராட்டம் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள கறுப்பின மக்களும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.