டிரம்ப் நடத்திய பிரச்சார கூட்டத்தில் பெரும் விலையை கொடுத்த ஆதரவாளர்கள்

உலகளவில் கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 20ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை அதிபர் டிரம்ப் நடத்திய 18 தேர்தல் கூட்டத்தினால் கூடுதலாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில், தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும் விலையை கொடுத்துள்ளனர் எனவும் ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிரம்ப் கூட்டம் நடைபெறும் இடங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், நிலைமை மேலும் மோசமாகலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் டிரம்பை விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்களைப்பற்றி கவலைப்படாத டிரம்ப், தன்னுடைய ஆதரவாளர்கள் பற்றியும் கவலைப்படவில்லை என்று கூறியுள்ளார். இதனால் தேர்தலில் இந்த கொரோனா விவகாரம் டிரம்ப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.