ஆளுநர் , எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளனர் ... இன்று காலை ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அதே போன்று , இன்று பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிந்த பிறகு நாளை மீண்டும் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளார்.

இதையடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரே கூட்டணியில் அதிமுக – பாஜக இருந்தாலும், பாஜக தமிழக தலைமை அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் சற்று உரசல் போக்கே நிலவி கொண்டு வருகிறது. திமுக சொத்து பட்டியலை வெளியிட்டு திமுக மீது சரமாரி புகார்களை வீசி வரும் அண்ணாமலை, அதிமுக ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியிருப்பது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.


மேலும் இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசுகையில் அதிமுக – பாஜக கூட்டணியை முடிவு செய்து இருப்பது பாஜக தேசிய தலைமை தான் என்று கூறி அண்ணாமலை கருத்துகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர். தமிழக அரசியல் சூழல் இப்படி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திப்பது என்பது மிக குறிப்பிடத்தக்க சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே வேளையில், ஆளுநர் ரவியின் டெல்லி பயணமும் தமிழக அரசியலில் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் ரவி 3 நாள் டெல்லி பயணத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளார் . ஆளுனர் ரவிக்கும் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே உரசல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்து. அதே போன்று திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றசாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தரப்பிலிருந்து ஆளுநருக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.