மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி. மொழிக் கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே கல்வி உரிமையை பறிப்பது என கடிதம் எழுதினோம். எதிர்க்கட்சிகளின் கடிதத்தின் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.