மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது; விவசாயிகள் கவலை

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,036 கன அடியிலிருந்து 3,839 கன அடியாக சரிந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வந்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,036 கன அடியிலிருந்து 3,839 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 54.61 டிஎம்சி ஆக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 92.81அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.70அடியாக சரிந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.