பாஜக தலைவரை இன்று துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி இருந்தது. கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியையும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது.

இருப்பினும் இருவரும் பிரிந்தே இருந்தனர். தற்போது, ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி ஆகியோருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனால் கடும் கோபமடைந்த சச்சின் பைலட்டு, பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.

டெல்லி சென்றிருந்த அவர், தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாக தெரிவித்தார். அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் 107 இடங்களைக் கொண்டுள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் அடுத்தவராக சச்சின் பைலட் இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சச்சின் பைலட் இன்று திங்கள்கிழமை பாஜக தலைவர் ஜேபி நாடாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.