அமெரிக்காவில் 21 மாதங்களுக்கு பின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பயணத்தை தொடங்கியது

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டில் விபத்துக்கு உள்ளானது. இதில் 189 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி மற்றொரு விபத்தை சந்தித்தது. அந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இரண்டு மிகப்பெரிய விபத்துகளைத் தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. இதனால் போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது. கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி இந்த விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டன. இந்நிலையில், ஆய்வுகள் திருப்திகரமாக இருந்ததால் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வர்த்தக ரீதியில் இயக்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து, 20 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 10-ம் தேதி முதல் முறையாக போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் முதல் பயணம் பிரேசில் நாட்டில் நடைபெற்றது. இந்நிலையில், அமெரிக்காவில் 21 மாத இடைவெளிக்குப் பிறகு போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளன. மியாமி மற்றும் நியூயார்க்கில் உள்ள லாகவுர்டியா நகரங்களுக்கு இடையே போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.