சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க சிபிஐ குழு மதுரை வந்து சேர்ந்தனர்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரணையை மேற்கொள்ள விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை சம்பவத்தை கொலை வழக்காக பதிவுசெய்து சிபிசிஐடி போலீஸார் வழக்கை விசாரித்தனர்.

தொடர்ந்து கொலை தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக கடந்த சனிக்கிழமை இரவு மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சம்பவம் நடந்த அன்று நிலையத்தில் இருந்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் 5 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஏடிஎஸ்பி விஜயகுமார்சுக்லா தலைமையில் பூனம்குமார், வெங்கடேஷ், அனுராசிங், பவன்குமார், சுசந்த் குமார், சைலேந்தர் குமார், அஜய்குமார், சச்சின் ஆகியோர் அடங்கிய 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தற்போது டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தற்போது சிபிஐ அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் இருந்து மூன்று வாடகை வாகனத்தில் விசாரணைக்காக தூத்துக்குடி சென்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.