74-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் தமிழக முதல்வர் தேசியக்கொடியேற்றினார்

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

சென்னை ராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.அதன்பின்னர் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்தார்.

சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- சுதந்திர போராட்ட தியாகிகளில் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

மேலும், மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.