பல்வேறு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டிய முதல்வர்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம், குடவாசலில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு நவீன சேமிப்புக் கிடங்கினை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், 21 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகள், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் தளங்கள், கூட்டுறவு வங்கி கிளை அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி புரிந்து பணிக்காலத்தில் காலமான 13 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்து வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைகளில் காலியாக உள்ள பத்து முறைப் பொறியாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவில் காலியாக உள்ள ஏழு உதவி மேலாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்து நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 625 ஊரக குடியிருப்புகளுக்கு நெய்வேலி சுரங்க நீரினை ஆதாரமாகக் கொண்டு 479 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், 89 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 9 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மருத்துவம் பயில 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டது. அதன் அடிப்படையில்,அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை ஆணைகளை பெற்ற 11 மாணவ, மாணவியர் முதலமைச்சரை சந்தித்து, தங்களது மருத்துவ கனவை நனவாக்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது முதலமைச்சர் மாணவர்களுக்கு மருத்துவருக்கான கோட்டுகள் மற்றும் ஸ்டெதஸ்கோப்புகளை வழங்கி, வாழ்த்தினார்.