அமுல் நிறுவன விளம்பர சிறுமியை உருவாக்கியவர் உடல்நலக்குறைவால் காலமானார்

மும்பை: அமுல் நிறுவனத்தின் மிக முக்கியமான விளம்பரமாக பார்க்கப்பட்ட அமுல் சிறுமியை உருவாக்கிய சில்வஸ்டர் டகுன்ஹா வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு அமுல் நிர்வாகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமுல் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்கள் இந்தியா முழுவதும் மிக பிரபலம். அந்த பால் பொருட்களை விளம்பரம் செய்வதற்காக ASP என்ற விளம்பர நிறுவனம் விளம்பர படங்களை தயாரித்துக் கொடுத்தது. அதில் முக்கியமான ஒன்று ஒரு சிறுமி கடவுளிடம் பிராத்தனை செய்வது போன்ற படம்.

1966 களில் மும்பையின் தெருக்கள் தோறும் அந்த விளம்பர பலகைகள் தொங்கின. அமுல் நிறுவனத்தின் பால் பொருட்களின் விற்பனையும் அதிகரித்தது. அதே போல் அந்த விளம்பரத்தில் இருக்கும் அமுல் சிறுமியும் மிகப் பிரபலமானார். அந்த சிறுமியை வடிவமைத்தவர் தான் சில்வஸ்டர் டகுன்ஹா.

ASP என்ற விளம்பர நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் தான் சில்வஸ்டர் டகுன்ஹா. இவர் உருவாக்கிய அமுல் சிறுமி அந்த நிறுவனத்தின் விளம்பர தூதுராகவே பார்க்கப்பட்டார். கருப்பு புள்ளி சிவப்பு நிறத்தில் கவுன் மற்றும் நீல நிற முடி என இருக்கும் அந்த சிறுமியின் படம் மிகவும் பிரபலமானது. இப்படி அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தை பிரபலமடைய செய்த டகுன்ஹா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரின் மறைவுக்கு அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அமுல் குடும்பமே அவரின் இழப்பிற்கு வருந்துவதாகத் தெரிவித்துள்ளார்.