கொரோனா பரவல் அதிகரிப்பதால் டில்லி எல்லைகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு மூடல்; முதல்வர் அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. இதுவரை கொரோனாவால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து டெல்லியின் அனைத்து எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநிலத்தின் அனைத்து எல்லைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகிறது.


அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

பாஸ் பெற்றவர்கள் மட்டுமே டெல்லிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பிறகு டெல்லி எல்லையை திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.