10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அடுத்த மாதம் உடனடித் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம் : கொரோனா பரவலை தொற்று ஓய்ந்து வந்ததற்கு பின் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கமான முறையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு பாடங்களும், தேர்வுகளும் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் கடந்த 2021-22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30 ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.

அது போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெற்றது. இப்போது இந்த 2 வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20ம் தேதியன்று வெளியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in போன்ற இணையதளங்கள் மூலம் தெரிந்துகொள்ளும் படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் முடிந்த கையோடு மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு திட்டமிட்டபடி ஜூன் 14ம் தேதியன்று வகுப்புகள் மீண்டுமாக துவங்கியது.

இப்போது தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு உடனடித் தேர்வுகளை நடத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான நடவடிக்கைகளை துவங்கி இருப்பதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.