44 நாட்களாக உப்பில் மகள் உடலை பாதுகாத்து வந்த தந்தை

மும்பை: 44 நாட்களாக பாதுகாத்தார்... மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் உடலை அவரது தந்தை கடந்த 44 நாள்களாக உப்பிட்டு பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, இரண்டாவது உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த தந்தை, தனது மகளின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு பதிலாக, குழிதோண்டி அதில் உப்பைக் கொட்டி அதற்குள் மகளின் உடலை வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு, வெள்ளியன்று அந்தப் பெண்ணின் உடல் மறு உடல்கூறாய்வு செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக வியாழக்கிழமையன்று பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் பெண் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் அளித்திருந்தார். ஆனால், நந்துர்பார் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு, பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறி, தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, பெண்ணின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தந்தை உள்பட ஒட்டுமொத்த குடும்பதும் நீதி கேட்டு போராடி வந்தனர். உடல் கூறாய்வு முடிந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் உடலை குழி தோண்டி அதில் உப்பு கொட்டி அதற்குள் பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில்தான், அந்தப் பெண்ணின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புக் கொண்டு மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.