மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து இன்று 30 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

இந்நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்று மகிழ்ந்தனர். . ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

இதை அடுத்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் குறைந்து 30 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளவான 120 அடி தண்ணீர் இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

எனவே அதன்படி அணையில் இருந்து இன்று காலை 30 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.