கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர் வனத்துறையினர்

சிறுத்தைக்கு கூண்டு வைத்த வனத்துறை... மேட்டுப்பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தைப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சின்னமலை கரடு பகுதியில் கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் மர்மமான விலங்கு ஒன்று சுற்றித் திரிவதாகவும் விலங்கு கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கடந்த இரண்டு மூன்று நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகத் தெரிய வந்தது.

இதனையடுத்து தற்போது அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கு சென்னை மலைக் காடு பகுதியில் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கூண்டு வைத்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து அந்த சிறுத்தையைப் பிடிக்கப் பிரத்தியேக கூண்டானது வரவழைக்கப்பட்டு அந்த கூண்டினுள் சிறுத்தைப் புலிக்கான உணவை வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சென்னா மலை காடு பகுதியில் ஏற்கெனவே கால்நடைகளையும் நாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி வந்த 2 சிறுத்தை புலிகள் வனத்துறையால் பிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.