இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்தது

சென்னையை அடுத்து மதுரையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி காலை 12 மணிமுதல் வரும் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமுலாகியுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில், மதுரையில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி, பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மேற்கு ஊரகப் பகுதிகளில் ஊரடங்கு அமுலில் இருக்கும். திருப்பரங்குன்றத்திலும் முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்படும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.