அரசாங்கம் தாக்கத்தை எதிர்கொள்ளும்; ரணில் எச்சரிக்கை

தாக்கத்தை அரசாங்கம் எதிர் கொள்ளும்... 19ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தாக்கத்தை நிச்சயம் அரசாங்கம் எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “தனிநபருக்கான அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் 19 ஆவது திருத்தம் பகிர்ந்தளித்து இருந்தது.

அதாவது, வேறொரு வழியில் நிறைவேற்று அதிகாரம் இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பின் 19 ஆவது திருத்தம் குறித்து கவலைப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் தற்போது, தனிநபருக்கு நிறைவேற்று அதிகாரம் தடையின்றி முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாத்திரமே குறித்த 20ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஜனாதிபதிக்குரிய அதிகாரம் மற்றும் அந்த முறைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர் நீதிமன்றம் விதித்த தடையால் மேற்கொள்ள முடியாமல் போனது.

மேலும், அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கான மரணப்பொறி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.