மேட்டூருக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிவடைகிறது

சென்னை: மேட்டூர் வரும் நீரின் அளவு சரிகிறது... காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்க மறுப்பதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

நீர்வரத்து சரிந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,524 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வினாடிக்கு 3,446 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 37.50 அடியிலிருந்து 36.94 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 10.56 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும் குடிநீர் தேவைகளுக்கும் 9.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள தண்ணீரை மட்டுமே பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். நீர்வரத்தும் இருப்பு உள்ள நீரை வைத்தும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு திறக்கும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடுவித்தால் மட்டுமே காவிரி டெல்டா விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும். இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாகவும் நீர் இருப்பு 10.56 டிஎம்சியாகவும் உள்ளது. அனைத்து வினாடிக்கு 3446கன அடி வீரம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6500கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது