குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

சென்னை: வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை உருவாகியது.

இதையடுத்து இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும்.

மேலும் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துயிருந்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது; இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.