முதுநிலை மருத்துவப்படிப்பு கலந்தாய்வு குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு மருத்துவ அலுவலர் சங்கம் நன்றி

தஞ்சாவூர்: முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசின் எம்.சி.சி., அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.மு.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்தக் கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஒன்றிய அரசின் எம்.சி.சி., அமைப்பே நடத்தும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து இந்த அறிவிப்பை திரும்பப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி டில்லிக்கு சென்றார். தொடர்ந்து மாநில அரசே கலந்தாய்வை நடத்தும் என்ற தமிழ்நாடு அரசின் விளக்கத்தை அளித்து வந்தார். தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என மாநில மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்திற்கு எம்.சி.சி. கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் உரிமையை மீட்கும் வகையிலான இந்நடவடிக்கையை முன்னெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி, முதன்மைச் செயலாளர், மருத்துவக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுக்குழு செயலாளர், துணை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.