அதிகளவு தண்ணீர் வரத்தால் 100 அடியை எட்ட உள்ளது மேட்டூர் அணை

100 அடியை எட்ட உள்ள மேட்டூர் அணை... கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட உள்ளது.

கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் 47 ஆயிரத்து 497 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகக் குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 புள்ளி 2 அடியாகவும், நீர் இருப்பு 62 புள்ளி 5 டிஎம்சி ஆகவும் இருந்தது.

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்புகின்றன. இதையடுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.