மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட காரணம் என்ன? மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவிலிருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் வெளியில் வந்தவுடன், அந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அமித்ஷா வருகையின் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திமுக அரசு திட்டமிட்டே அமித் ஷா வருகையின் போது மின்சாரத்தை துண்டித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டு குறித்து கூறியதாவது:- சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின் விநியோகம் தடை தற்செயலாக நடந்தது.

மேலும் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளது என அவர் கூறினார்.