புதுமாப்பிள்ளைக்கு சிகரெட், பான் மசாலா கொடுத்து வரவேற்ற மாமியார்

குஜராத்: புதுமாப்பிள்ளைக்கு சிகரெட்... சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தில் புது மாப்பிள்ளைக்கு அவரது மாமியார் சிகரெட் பற்ற வைக்கும் வீடியோ காட்சி வைரலாகப் பரவி வருகிறது.

குஜராத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளைக்கு சிகரெட்டும் பான் மசாலாவும் வழங்கி வரவேற்கும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.

இன்ஸ்டா, சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் உறவினர்கள் முன்னிலையில், சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரது மாமியார் வாயில் பற்ற வைக்காத சிகரெட்டை வைக்கிறார். மாமனார் அந்த சிகரெட்டைப் பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின் அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்துவிடுகிறார். குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த விநோத வழக்கம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

இது அவர்களின் பாரம்பரிய திருமண நிகழ்ச்சியின்போது நடைபெறும் ஒரு பகுதியாக இனிப்பு வகைகளுடன் பான் மசாலாவும் சிகரெட்டும் வழங்கி வரவேற்கப்படும் சடங்கு என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மீடியாவில் கவனம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று ஒரு சிலர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால், இது நமது நாட்டின் பல பகுதிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் சடங்கு என்றும் சொல்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மணமகனை நிஜமாகவே புகை பிடிக்க வைப்பது இல்லை. அவர்களின் திருமணத்தின்போது வழக்கப்படி நடைபெறும் சடங்கில் இதுவும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது.