லெபனானுக்கு உதவி கரம் நீட்டுகின்றன உலக நாடுகள்

உலக நாடுகள் உதவ முன் வந்துள்ளன... லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலக நாடுகள் முன்வந்துள்ளன.

அண்டை நாடான லெபனானுக்கு மருத்துவ உதவி வழங்கத் தயாராக இருப்பதாக சைப்ரஸ் அறிவித்துள்ளது. இதேவேளை, பாரிய குண்டுவெடிப்பில் லெபனானுக்கு மருத்துவ உதவி அனுப்பவும் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளிக்கவும் ஈரானின் ஜனாதிபதி முன்வந்துள்ளார். மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தனது நாட்டின் வருத்தத்தை வெளிப்படுத்தினார். மேலும் எங்களால் முடிந்த எந்த வகையிலும் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லெபனான் மக்களுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. நாங்கள் உதவ அங்கு இருப்போம். இது ஒரு பயங்கரமான தாக்குதல் போல் தெரிகிறது’ என ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவோரில் துருக்கியின் மனிதாபிமான நிவாரண அறக்கட்டளை (ஐ.எச்.எச்) உள்ளது. மேலும் அங்காரா ஒரு கள மருத்துவமனையை கட்டியெழுப்பவும் தேவைக்கேற்ப உதவவும் முன்வந்துள்ளது.

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிப்பில் காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சை அளிக்க பிரான்ஸ் இரண்டு இராணுவ விமானங்களை அனுப்பவுள்ளது. இதில் தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களுடன் 15 டன் சுகாதார உபகரணங்கள் மற்றும் ஒரு நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்படுமென ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. மேலும், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டை உலுக்கிய பாரிய வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருத்தம் தெரிவித்தார். பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் இறந்தவர்களில் குறைந்தது இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் அடங்குவதாக லெபனானில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒரு அவுஸ்ரேலியர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார். பெய்ரூட் வெடிப்புக்கு லெபனான் அதிகாரிகள் கூறிய அம்மோனியம் நைட்ரேட், மணமாக இல்லாத படிகப் பொருளாகும். இது பொதுவாக உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல தசாப்தங்களாக ஏராளமான தொழில்துறை வெடிப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

எரிபொருள் எண்ணெய்களுடன் இணைக்கும்போது, அம்மோனியம் நைட்ரேட் கட்டுமானத் தொழிலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த வெடிபொருளை உருவாக்குகிறது. ஆனால், இதனை வெடிபொருட்களுக்காக தலிபான் போன்ற ஆயுதக் குழுக்கள் பயன்படுத்துகின்றது.