தென் ஆப்பிரிக்காவில் இருந்துதான் இங்கிலாந்துக்கு புதிய கொரோனா பரவியதாக தகவல்

இங்கிலாந்தில் தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முன்பிருந்த வைரசைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. தினமும் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் உச்ச அளவாக 53 ஆயிரம் பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 414 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 71 ஆயிரத்து 567 ஆக உயர்ந்தது. தலைநகர் லண்டனில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால் ஆஸ்பத்திரியில் நிரம்பி வழிகிறது. அவசர சிகிச்சை பிரிவு முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இட பற்றாக்குறையால் ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து ஆஸ்பத்திரிகளில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கையை தற்போது தாண்டி இருக்கிறது. புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 3-வது ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கிருந்துதான் இங்கிலாந்துக்கு இந்த புதிய கொரோனா பரவியதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் நேற்று 9580 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 497 பேர் உயிரிழந்தனர். வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.