அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் - நோய் கட்டுப்பாடு இயக்குனர் எச்சரிக்கை

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரசின் முதல் அலையை விட 2-வது அலை மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் அங்கு புதிதாக 10 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளும் ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் அமெரிக்காவில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்பீல்ட் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ராபர்ட் ரெட்பீல்ட் கூறுகையில், அடுத்த 3 மாதங்களில் கொரோனா பரவல் அமெரிக்காவை அதன் வரலாற்றில் மிகவும் கடினமான பொது சுகாதார நிலைமைக்கு தள்ளக்கூடும். இதனால் அடுத்த 3 மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றார்.

மேலும் அவர், நாடு முழுவதிலும் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதிதாக 40 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்காவில் இதயம் சார்ந்த மற்றும் பிற நோய்களை விட கொரோனா வைரஸ், இறப்புக்கு ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என தெரிவித்தார்.